கேக்கில் ஐஸிங் செய்யும் போது மிகவும் கவனம் தேவை. ஸ்பூனால் மொத்தமாக ஐஸிங்கை எடுத்து கேக் மீது பரவலாக விட வேண்டும். ஐஸிங் கேக் மீது விடும்போது சூடாகவோ, குளிர்ந்தோ இருக்கக் கூடாது. வெதுவெதுப்பாக இருப்பது நல்லது. ஐஸிங் செய்யும் முன் கேக் மீது உள்ள துகள்களை மெல்ல தட்டி எடுத்து விட வேண்டும். முதலில் கேக் மீது சர்க்கரைப்பாகை தடவிய பின் ஐஸிங் செய்ய வேண்டும்.
மொறு மொறுப்பாக வர வேண்டிய ஸ்வீட் மெத்தென்று இருந்தால் கைப்பிடி சோள மாவு கலந்து செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
லட்டு செய்யும்போது ஒரு மாறுதலுக்காக ‘டூட்டி ஃப்ரூட்டி’ சேர்த்து செய்தால் கலர்ஃபுல்லாக அழகாக இருக்கும். அல்வா செய்யும் போது சிறிதளவு பால் பவுடர் சேர்த்து செய்தால் அல்வா மேலும் சுவையுடன் இருக்கும்
பீட்ரூட் அல்லது கேரட் சமைக்கும்போது கலர் மாறி விடாமல் இருக்க சிறு துண்டு இஞ்சியை தட்டிச் சேர்த்து வேகவிட்டால் கேரட், பீட்ரூட் ஆகியவை கலர் மாறாமல் இருக்கும்.
திடீர் விருந்தினர் வந்துவிட்டால் தோசை மாவு கொஞ்சம் எடுத்து 2 டீஸ்பூன் பச்சரிசி மாவை கலந்து, கொஞ்சம் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு கலந்து வடையாக போட்டு சுட்டெடுக்கலாம்..
ரசத்தில் நாட்டுத்தக்காளி பயன்படுத்தும்போது அதை அரிந்து போடுவதற்கு பதில் கையால் நாலாகப் பிய்த்துப் போட்டுக் கொதிக்க விட்டால் ரசம் சுவை கூடும்.
எந்த துவையல் ஆனாலும் அதில் ஒரு கணு பிரண்டையையும் சேர்த்து அரைத்தால் நல்ல ஜீரண சக்தியும், சுவையும்இருக்கும்.
சேமியா பாயசம் செய்யும்போது பயத்தம்பருப்பை லேசாக வறுத்து சேர்க்கவும். 1 மூடி தேங்காயைத் துருவியும், 1 மூடி தேங்காயை பொடியாகவும் நறுக்கி சேர்த்தால் பார்க்க அழகாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
பிரெட் ஸ்லைஸ் மீது வெண்ணெய் தடவி அதில் சிறிது எள் பொடியைச் சேர்த்து சாண்ட்விச் செய்தால் ருசி பிரமாதமாக இருக்கும்.
டப்பாவில் இட்லி எடுத்துச் செல்லும் போது அதன் மீது நெய் அல்லது நல்லெண்ணெய் தடவி எடுத்துச் சென்றால் வறண்டு போகாமல் அப்படியே இருக்கும்.
பிரெட் மீந்து விட்டதென்றால் அதனை மிக்சியில் இட்டுப் பொடியாக்கி உப்பு, காரம், கரம்மசாலா, கொத்தமல்லித்தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து கட்லெட்டாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான, புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால் மோர்க்குழம்பு தயார்.
நறுக்கிய ஆப்பிள், பேரிக்காயை உப்புத் தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காது.
துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு வெந்ததும் 1 டீஸ்பூன் எடுக்கவும். அவரை, பீன்ஸ், கோஸ், முள்ளங்கி, கேரட் பொரியல் இறக்கும் போது, வெந்த பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் சுவை கூடும்.
கொள்ளு, காராமணி, மூக்கடலை வேகவைத்த நீரை கொட்டாமல் சூப், ரசம் செய்யலாம்.
நன்றாக புளித்த தயிரில் ரவையை ஊறவைக்க வேண்டும். அதில் இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை இவற்றை சேர்த்து வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு எடுத்தால் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.
சிப்ஸ் சீவும் கட்டரில் முட்டைக்கோஸ் வைத்து சீவினால் ஒரே சீராக, அழகாக இருக்கும். சீக்கிரம் முட்டைக்கோஸ் வதங்கி விடும்.
முருங்கைக்கீரையும், வாழைப்பூவும் சம அளவு சேர்த்து பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
